Wednesday, July 3, 2013

மீண்டெழும் பாண்டியர் வரலாறு -- அ.மார்க்ஸ் (2)

மள்ளர் வரலாறு நூலின் பிரச்சினைகள் (2) – அ.மார்க்ஸ்


சிவாஜி கணேசன் நடித்த பி.ஆர்.பந்துலுவின் ‘வீர பாண்டிய கட்டபொம்மன்’ திரைப்படம் ஒரு சிலருக்கு நினைவிருக்கலாம். அதில் ஜெமினி கணேசன் கட்டபொம்மனின் தளபதி வெள்ளையத் தேவனாக வருவார். தேவர் சாதியைச் சேர்ந்த வீரமிகு தளபதியாக அவர் சாதியினரால் வெள்ளையத் தேவன் மதிக்கப்படுவதை நாம் அறிவோம். சங்கரதாஸ் சுவாமிகளின் (அவரும் ஒரு தேவர்தான்) கட்டபொம்மன் நாடகத்தை நான் ஒரு முறை நண்பர் கோச்சடையுடன் காரைக்குடியில் ஒரு இரவு முழுவதும் பார்த்தேன், அதில் பொம்முவைக் காட்டிலும் தேவனே முக்கிய பாத்திரமாக வருவார்,

கட்டபொம்மனின் தளபதியாகவும் மனித வெடிகுண்டாகத் தன்னை மாற்றிக் ஒண்டு வெள்ளையர்களின் வெடி மருந்துக் கிடங்கைத் தகர்த்துத் தன்னையே தியாகம் செய்து கொண்ட மாவீரனாகவும் இன்று தேவேந்திர குல வேளாளார்களால்  போற்றப் படும் வீரன் சுந்தரலிங்கம் பள்ளர் சமூகத்தைச் சேர்ந்தவர்.. ஆனால் திரைப் படத்தில் சுந்தரலிங்கமாக வருவது ஏ.கருணாநிதி என்கிற நகைச்சுவை நடிகர். அவரது மனைவியாக வருவது நகைச்சுவை நடிகை முத்துலட்சுமி. படத்தில் நகைச்சுவைப் பாத்திரங்களாக அவர்கள் வந்து போவர். ஒரு ஆபத்தான கட்டத்தில் உளவு பார்க்க யாரை அனுப்புவது என்கிற கேள்வி வரும்போதூ ஏ.காருணாநிதி (அதாவது சுந்தரலிங்கம்) நான் போகிறேன் என்பார். அதை ஏற்று சிவாஜி கணேசன் சொல்வார்: “பொடியன்... பொருத்தமானவன்”. ம.பொ.சியின் மேற்பார்வையில் எடுக்கப்பட்ட படம் இது என்பது குறிப்பிடத் தக்கது.

இப்படியான நிலை இன்று மாறியுள்ளது. இன்று யாரும் சுந்தரலிங்கத்தை அப்படிச் சித்திரித்துவிட இயலாது.. இடைக்காலத்தில் ஏற்பட்டுள்ள அடையாள அரசியலின் தாக்கமும், அடித்தளச் சாதிகளின் உறுதியாக்கமும் இன்று இத்தகைய நிலைக்குக் காரணமானதை நாம் வரவேற்கலாம்.

ஆனால் அடையாள அரசியல் என்பது ஒரு இரு பக்கமும் கூரான கத்தி என அமார்த்ய சென் போன்றோர் சொல்வதை நாம் மறந்துவிட இயலாது. இத்தகைய சாதிப் பெருமைகள் தன் சாதி இழிவுக்கெதிராக நிற்பதோடு முடிந்து விடுவதில்லை. பிற சாதிகளை இழிவு செய்வதாகவும் பல நேரங்களில் வடிவெடுக்கிறது. இதுகாறும் தம்மை இழிவு செய்த சாதிகளை இன்று இவர்கள் இழிவு செய்தால் என்ன குடி முழுக்கிப் போகிறது என்று கேட்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. இது புதிய ஊசல்களுக்கும் வன்முறைகளுக்கும் காரணமாகும். பூசலில்லாமல் அமைதி வழியில் இழிவைப் போக்கிக்கொள்ள வேண்டும் என நான் சொல்லவரவில்லை. அது சாத்தியமில்லை. ஆனால் அது நம் மீதான இழிவுக்கெதிராக கிளர்ந்தெழும்போதும் தமது அடையாளங்களை உறுதிப்படுத்திக் கொள்ளும்போதும் உருவாகும் பூசலாக இருக்க வேண்டும். மாறாகப் பிறரை இழிவு செய்து உருவாக்கும் பூசலாக இருப்பது தந்திரோபாய அடிப்படையிலும் கூடச் சரியாக இருக்க இயலாது.

இந்த நூலில்,

“வேளாண்மை என்றால் என்னவென்று தெரியாத வேளாளர், வெள்ளாளர் என்று வேடம் பூண்டு வெற்று முலாம் பூசி ஒப்பனை செய்து கொள்கின்ற பிளளைச் சாதியினர் தமிழர் வேர்களின் மூலக் குடியினர் அல்லர்...”(பக் 91)

“மறவர்கள் மாடு திருடுவதில் கை தேர்ந்தவர்கள். மதுரைப்பகுதியில் மறவர்கள் மாடுகளைத் திருடுவதற்குத் தனி நுட்பத்தையே கையாண்டனர்..” (பக் 217).

இப்படி நிறையக் காணக் கிடக்கின்றன. முன்னது நூலாசிரியரின் சொந்தக் கருத்தாகவும், பின்னது உடன்பாட்டுடன் கூடிய மேற்கோளாகவும் காட்டப்படுகிறது. முன்னதை “வேளாளர்கள்” குறித்த இவரது “ஆராய்ச்சி” முடிவு என்றும், பின்னது ஒரு வரலாற்றுண்மை எனக் கொண்டாலும் இன்று இந்நூல் தடை செய்யப்படுவதற்கு அரசால் சுட்டிக்காட்டப்படும் காரணங்களாக மாறிவிடுவதைக் கருத வேண்டும். அரசு சொல்கிறது என்பது மட்டுமல்ல பொதுப் புthதியிலும் (common sense) இது நூலுக்கெதிரான கருத்தையும் தடைக்கு ஆதரவையும் ஏற்படுத்தி விடுகிறது.

இது கூடப் பரவாயில்லை என எடுத்துக் கொண்டாலும். அடையாள அரசியலின் இன்னோரு ஆபத்தாக நாம் இந்த ‘மள்ளர் அரசியலில்” காண்பது, இவர்கள் தம்மை மேலுயர்த்திக் கொள்வது என்பது மட்டுமல்ல, பிற தலித் சாதிகளைத் தங்களுக்குக் கீழானவர்களாகவும், தீண்டத் தகாதவர்களாகவும் கூடக் கருதும் நிலை உள்ளது, ஆக, இந்து மதத்தின் சாதி, வருண முறையை இவர்கள் ஏற்றுக் கொள்ளும் நிலை வந்து விடுகிறது. இந்ந்நூலாசிரியரின் முன்னோடியான குருசாமி சித்தர் மள்ளர்களை (அதாவது பட்டியலில் பள்ளர்கள் எனச் சுட்டபடுவோர்) பட்டியல் சாதியிலிருந்து (SC) நீக்க வேண்டுமெனச் சொல்லி வருபவர் என்பது குறிபிடத் தக்கது. அரசியல்களத்தில் இவர்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் டாக்டர் கிருஷ்ணசாமி, அருந்ததியர்க்கு உள் ஒதுக்கீடு அளித்துள்ளதை எதிர்த்து உச்ச நீதிமன்றம் வரை சென்றுள்ளதும், இட ஒதுக்கீடே வேண்டாம் எனச் சொல்லிக் கொண்டிருப்பதும் கவனத்திற்குரியது.

இந்த நூல் இதுகாறும் ஆதிக்கம் செய்தவர்களை மட்டுமின்றி. இதுகாறும் சாதி முறையால் கொடூரமாக வஞ்சிக்கபட்ட சாதிகளையும் இழிவு செய்யத் தயங்கவில்லை. சில எடுத்துக்காட்டுகள்:

“...அதிகாரத்தைப் பயன்படுத்திச் சிலர் தங்களது பொட்டுக்கட்டிச் சாதியான சின்ன மேளம் என்னும் தெலுங்குச் சாதியினை ‘இசை வேளாளர்’ எனவும் இட்டுக்கட்டி எழுதி மகிழ்கின்றனர்..” (பக் 91)

“பறையர் வரம்பு மீறிப் பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்கள்..” (பக்.219)

மறுபடியும் முன்னது நூலாசிரியரின் கருத்தாகவும் பின்னது உடன்பாட்டுடன் கூடிய மேற்கோளாகவும் நூலில் இடம்பெறுகிறது.

இதை எல்லாம் என்ன சொல்வது?

காலங்காலமாகத் தேவதாசியர்களாக ஆதிக்க சாதியினரின் பாலியல் சுரண்டலுக்கு ஆட்பட்ட கோவில் பணியாளர்களான இசை வேளாளர்களையும் மாடு தின்னும் புலைய உனக்கு மார்கழித் திருநாளா என ஏசி ஒதுக்கபட்ட மக்களையும் இப்படிச்சொல்வதை எப்படி ஏற்றுக் கொள்வது? நாங்கள் பள்ளர்கள் அல்ல மள்ளர்கள் எனப் பெருமிதத்துடன் சொல்வதை நாம் ஏற்கிறோம். “பொட்டுக்கட்டிச் சாதியினர்” தம்மை ஏன் இசை வேளாளர் எனக் கூறிக் கொள்ளக் கூடாது? இசையால் எப்படி வேளாண்மை செய்ய முடியும் என்று கிண்டல் வேறு, தி.மு.க தலைவர் கருணாநிதியை “வந்தேறி வடுகராக”ச் சித்திரிக்கும் கொடு அரசியலின் ஓரங்கம் இது என்பதை நாம் கவனிக்கத் தவறலாகாது.

இப்படியானவற்றைதான் அடையாள அரசியலில் இன்னொரு விரும்பத் தகாத பக்கம் என்கிறோம். ஆனானப்பட்ட அறிஞர் அயோத்திதாசப் பண்டிதரே இதற்கு விதி விலக்காக இல்லையே. நமது சாதி முறையில் பறையர்களுக்குக் கீழாக அருந்ததியர் உள்ள நிலையை ஏற்றதோடு பறையர் அருந்ததியர் மீது கடைபிடிக்கும் தீண்டாமையை ஏற்றுக்கொண்டு அங்கீகரித்தாரே.

இதைவிட இந்த நூலின் மிக ஆபத்தான அரசியல் தமிழ்நாட்டு மக்களை தமிழ்ச் சாதிகள் எனவும் வந்தேறிச் சாதிகள் எனவும் பிளவு படுத்த முயல்வதுதான்”. வந்தேறி வடுகர்” என்பதாகப் பல நூற்றாண்டுகளாக நம்மோடு கலந்து போன நாயக்கர், அருந்ததியர் முதலான சாதியினரை எதிரிகளாக நிறுத்தும் தமிழ்ப் பாசிசத்திற்கும் இந்நூல் துணை போகிறது. தந்தைபெரியாரை மட்டுமல்ல, கலைஞர் கருணாநிதியை, வை.கோவை, பேராசிரியை சரஸ்வதியை எல்லாம் வந்தேறி வடுகர் என இவர்கள் எதிரிகளாக நிறுத்துவது குறிப்பிடத்தக்கது. இன்நூலை விதந்து முன்னுரை எழுதியுள்ள பெங்களூரு குணா தமிழக அருந்ததியர்க்கு இட ஒதுக்கீடே அளிக்கக் கூடாது எனவும், “மராட்டியராம் அம்பேத்கரை” தலித் மக்கள் வழிகாட்டியாக ஏற்கக் கூடாது எனவும் எழுதியவர்.

நாயக்க மன்னர்களின் ஆட்சிக்கு முன்னர் இங்கே சாதிக் கொடுமை இல்லை, பாலுந் தேனும் பெருகி ஓடிற்று என்கிற கருத்து இந்நூலின் ஏகப்பட்ட முன்னுரைகளிலிருந்து நூல் முழுக்க விரவிக் கிடக்கிறது. இன்றைய தமிழகத்தின் எல்லாப் பிரச்சினைகளும் ‘வந்தேறி வடுகர்’ ஆட்சியும் திராவிட இயக்கமுந்தான் காரணம் என்கிற கருத்து ஆபத்தானது மட்டுமல்ல மகா அபத்தமானதும் கூட. சுந்தர பாண்டியன் கல்வெட்டிலேயே “பறையர் பள்ளர்” என இழிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளதை நான் பல ஆண்டுகட்கு முன்பே ஆதாரத்துடன் சுட்டிக் காட்டியுள்ளேன் (பார்க்க: எனது ‘சிற்றிலக்கியங்கள் சில குறிப்புகள்’).

இபோதும் இங்கே நாயக்கர்/ நாயுடு முதலானோரே பொருளாதார ரீதியில் தமிழகத்தில் ஆதிக்கம் செலுத்துகின்றனர் என்பதற்கும் பெரிய ஆதாரங்கள் இல்லை. தமிழகத் தொழில் முதலாளிகளில் முதல் 15 இடங்களில் எட்டு இடங்கள் பார்ப்பனர் கைவசம் உள்ளன, செட்டியார்களிடம் நான்கு இருக்கின்றன. ராம்கோ மற்ரும் லட்சுமி மில்ஸ் என இரு முதலாளியர் மட்டுமே இவர்கள் குறிப்பிடும் ‘தெலுங்கர்கள்’.

வரலாறு இப்படி இருக்க சாதிக் கொடுமைக்குக் காரணமான நமது வருணாசிரமத்தையும் பார்ப்பன ஆதிக்கத்தையும், ராஜராஜ சோழர்களையும் அவர்களது கொடூரமான நில உடைமை முறையையும், தேவதாசிக் கொடுமையையும் “தமிழர் காணியாட்சி” எனவும் தமிழ் மாண்பு எனவும் போற்ற முற்படுவது வரலாற்றை மீட்டெடுக்கும் முயற்சி அல்ல. வரலாற்ரைப் பின்னுக்குத் தள்ளும் செயல்.

இறுதியாக ஒன்று. இந்நூலின் ஆய்வு முறை பல அபத்தங்களையும் தவறுகளையும் உள்ளடக்கியுள்ளது. வரலாற்றறிஞர்களும் புலமையாளர்களும் இதை ஏற்பதற்கு வாய்ப்பே கிடையாது. இவர் முன்வைக்கும் எடுகோளும் கூட முற்றிலும் இவரது பங்களிப்பு அல்ல. முன்னதாக தேவ ஆசீர்வாதம், குருசாமி சித்தர் முதலானோர் கூறியவற்றிலிருந்து பெரிதாக இவரொன்றும் சொல்லிவிடவில்லை.

இவரது ஆய்வு முறைக்கு ஒரே ஒரு சான்று: முதலில் இவர் ‘வேளாளர்’ என்பது பள்ளர்கள்/ மள்ளர்களையே குறிக்கிறது என ஐயத்திற்கிடமற்ற  சான்றுகள் இன்றி வைத்துக் கொள்கிறார். பின்னர், “சேர, சோழ, பாண்டிய அரசர் வேளாள மரபில் தோன்றியவரே” என வி.கனகசபைப் பிள்ளை, ந.சி.கந்தசாமிப் பிள்ளை, கா.அப்பாத்துரை ஆகியோர் கூற்றுக்களை மேற்கோள் காட்டி:, ஆக மள்ளர்களே மூவேந்தர்கள் என ‘நிறுவுகிறார்’. முதலிம் மேற்குறிப்பிட்ட மூவரின் கூற்றுக்களுமே ஆய்வுலகு ஏற்றுக் கொண்ட நிறுவப்பட்ட உண்மைகள் அல்ல. அப்படியே வைத்துக் கொண்டாலும் கூட மேற்கோளாசிரியர்கள் மூவரும் “மள்ளர்களே வெள்ளாளர்கள்” என்கிற கருத்தை ஏற்பவர்கள் அல்ல, அவர்கள் சொல்லும் வெள்ளாளர் என்போர் இன்று பிள்ளைமார்கள் / முதலியார்கள் என அழைக்கப்படுவோரே. அப்படியிருக்க தனது முடிவுகளுக்கு இவற்றையெல்லாம்
ஆதாரமாகக் கொள்வதெப்படி?

இப்படி நிறையச் சொல்லலாம்,

நாங்கள் ஆண்ட பரம்பரையினர். மூவேந்தர் வழி வந்தோர் என யாரும் சொல்லிக் கொள்லலாம். அடையாள உறுதியாக்கத்தின் தமிழ் வடிவம் என நாமும் இதை வரவேற்கலாம். ஆனால் இந்நூல் அதையும் தாண்டிச் செய்யும் முயற்சிகள் இவர்கள் சொல்லிக் கொள்வதைப்போல “தமிழ்ச் சாதிகளையும்” கூட ஒன்றிணைக்கப் போவதில்லை. ஏற்கனவே குறைந்த பட்சம் இரு “தமிழ்ச் சாதிகள்” இந்நூலின் தடையை வரவேற்றுள்ளன.
தென்மாவட்டங்களில் இம்மக்கள் மத்தியில் நின்று ஆதிக்க சாதிக் கொடுமைகளை எதிர்த்து வரும் ‘தியாகி இம்மானுவேல் பேரவை’ நிறுவனர் தோழர் பூ.சந்திர போசு அவர்கள் இந்த மள்ளர் அரசியலை ஏற்பதில்லை. நேற்று நான் அவருடன் பேசிய போதும், “இந்தப் புத்தகத்தின் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. ஆனால் புத்தகத்தைத் தடை செய்தது தவறு” என்றுதான் குறிப்பிட்டார்.

நான் இக்கட்டுரையின் முதற் பகுதியில் சொல்லியிருந்தது போல ஆதிக்க சாதியினர் இத்தகைய செயல்களில் ஈடுபட்டு “வரலாற்று உண்மைகளை” உருவாக்கிக் கொண்டபோதெல்லாம் சும்மா இருந்துவிட்டு அடித்தளச் சாதியினர் இதை செய்யும்போது ஏன் இந்தத் தடை? தேசத் துரோகச் சட்டம் எப்படி இதற்குப் பொருந்தும்?

பூலித் தேவனின் படைத் தளபதியாக அறியப்படும் ஒண்டி வீரன் எனும் அருந்ததியரை, அவர் வெறும் தளபதி அல்ல மன்னர் என எழுத்தாளர் பிரபஞ்சன் எழுதினார், அருந்ததியர்கள் இன்று அவரை மன்னராக முன் நிறுத்துகின்றனர். பூலித் தேவனுக்கு விழா எடுக்கும் நடராசன் (சசிகலா) இப்படிச் சொல்வதற்கெதிராக ‘தமிழக அரசியல்” பத்திரிக்கையில் இரண்டு பக்கம் பேட்டி கொடுத்தார்.  பூலித் தேவனுக்கு ஒரு தேவர் அடையாளத்துடன் விழா எடுப்பது அவர் உரிமை. ஆனால் ஒண்டி வீரனை மன்னனாக முன் நிறுத்தாதீர்கள் எனச் சொல்வது என்ன நியாயம்? நெற்கட்டுச் சேவலில் இவ்வாறு ஒண்டி வீரனை மன்னராக முன் வைத்த நினைவுச் சின்னம் ஒன்று பின்னர் அகற்றப்பட்டது. நடராசன் தமிழ்த் தேசியர்களுக்கு மிகவும் நெருக்கமானவர் என்பது குறிப்பிடத் தக்கது,
ஒண்டி வீரன் நினைவுச் சின்னம் அகற்றப்பட்டது, இம்மானுவேல் சேகரனுக்குக் குரு பூஜை நடட்தும் முயற்சியில் ஆறு பேர் பலியானது ஆகியவற்றுன் தொடர்ச்சியாகவே இந்நூலின் மீதான தடையையும், செந்தில் மள்ளர் மற்றும் அவரது குடும்பத்தார் துன்புறுத்தப்படுவதையும் பார்க்க வேண்டியுள்ளது.

அரசின் இந்தத் தடையைக் கண்டிக்கும் அதே நேரத்தில், இந்தப் புத்தகத்தின் அரசியல் மிகவும் ஆபத்தானது என்பதைச் சொல்லாமல் இருக்க இயலவில்லை. 

4 comments:

  1. அபத்தமான கட்டுனர.

    ReplyDelete
  2. அபத்தமான கட்டுனர.

    ReplyDelete
  3. மீண்டடெழும் பாண்டியர் வரலாறு

    ReplyDelete